இந்த தளம் நகர்த்தப்பட்டுள்ளது

அன்புடையீர்,
இந்த தளம் எனும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனது தளத்தில் http://mayuonline.com/blog தமிழ் வலைப்பதிவு உள்ளது.

அன்புடன்,
மயூரேசன்

காதலி வேண்டாம் காதலி


இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்கும் வேளையில் காதலி இல்லாவிட்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்று விளக்குகின்றேன் பாருங்கள்.
  1. நேரம் மீதமாகும்
  2. நன்றாக நித்திரை கொள்ளலாம்
  3. மிஸ் கால் வந்தால் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை
  4. எந்த உணவு விடுதியிலும் சாப்பிடலாம்
  5. நடுராத்திரியில் அலுப்படிக்கும் எஸ்.எம்.எஸ் வராது
  6. எல்லா பொண்ணுங்களோடையும் கதைக்கலாம்
  7. அட்வைஸ் பண்ணி அறுக்க யாரும் இருக்கமாட்டாங்க
  8. எங்கேயும் யாரோடையும் போகலாம்
  9. எப்படி அழகாக உடை உடுத்துகின்றேனா எனக் கவலைப்படத் தேவையில்லை
  10. பழைய புளித்துப்போன பகிடிகளைக் கேட்கத்தேவையில்லை

இப்ப சொல்லுங்கள் இப்பவும் உங்களுக்கு கேள் ஃபிரண்ட் தேவையா???

"எனக்கொரு கேள் பிரண்ட் தேவையில்லையாடா" இப்பவே பாடத்தொடங்குங்கள்!!!!

நண்பன் தனேஷின் கவிதைகள்- பாகம் இரண்டு

உன் கால் தடம் எனும் கவிதைக்கு
இசை அமைத்துக்கொண்டு போகிறது
உன் கொலுசு !!!

நீ வாழ்வதால்தான்
இது பூவுலகம்
இல்லையென்றால்
வெறும் உலகம் !!!

நெடு நேரமாக என் பாடப்புத்தகத்தின்
ஒரே பக்கத்தில் நிற்கின்றேன்
அதில் உன் புகைப்படத்தை
வைத்திருப்பதால் !!!!

குங்குமத்திற்கு நன்றிகள்: கணணி ஆணா? பெண்ணா?

வலையில் ஒரு தமிழனின் அரங்கேற்றம்: கணணி ஆணா? பெண்ணா?
மேற்கண்ட பதிப்பை தமது குங்குமம் சஞ்சிகையில் 93 ம் பக்கத்தில் வெளியிட்ட வலைப்பூ வாளி தெரிவுக்குழுவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இப்படியான முயற்சிகள் வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை.
மீண்டும் ஒரு தடவை குங்கும் சஞ்சிகைக்கும் கெளதம் சாருக்கும், வலைப் பூ வாளி தெரிவுக் குழுவுக்கும் நன்றி!

சால் வீ டான்ஸ் (2004) - திரைவிமர்சனம்


பரபரப்பான சிக்காகோ நகரத்தைக் காட்டுவதுடன் இந்தத்திரைப்படம் ஆரம்பிக்கின்றது. இங்கு கதையின் முக்கிய பாத்திரமான யோன் கிளாக் ஒரு கணக்கியலாளர். அளவுக்கதிகமாக வேலை செய்து வேலை செய்து கிட்டத்தட்ட விரக்தி அடைந்து விட்ட ஒரு கணக்கியலாளர்.

ஒவ்வொரு நாளும் இவர் வேலை முடிந்து மின்சார இரயிலிலே வீடு திரும்பும் வழியில் ஒரு நடனப் பள்ளியைக் காண்கிறார். அதன் ஜன்னல் ஓரத்தில் நிற்கும் ஒர அழகுப் பதுமையையும் (ஜெனிபர் லோபெஸ்) காண்கிறார்.

இந்தப் பெண்ணைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கிளார்க் அந்த நடனப் பள்ளியில் போல் ரூம் நடனம் கற்றுக்கொள்ளச் சேர்கின்றார். அந்த பள்ளியில் பிரதான ஆசிரியையான மிற்சி என்பவரின் கீழ் நடனம் பயில ஆரம்பிக்கும் இவர் தன் கண்களைக் கவர்ந்த அந்த அழகுப் பெண்ணின் பெயர் போலீனா எனவும் அவர் அந்த நடனப் பள்ளியில் உதவி ஆசிரியர் எனவும் அறிந்து கொள்கிறார்.

வெறுமனே சேர்ந்த நடனத்தில் கிளார்க் காலப்போக்கில் ஒன்றி விடுகின்றார். இதற்கிடையில் இவரின் அலுவலக நண்பர் ஒருவரும் அங்கே நடத்துறையில் இருப்பதை அறிந்து கொள்கின்றார். ஆயினும் அந்த நண்பர் தன்னை வெளி உலகிற்கு ஒரு விளையாட்டு இரசிகனாக மட்டுமே காட்ட விழைகின்றார். இவரும் கதையில் முக்கியமான ஒரு பாத்திரமாகின்றார்.

ஆரம்பத்தில் கிளார்க்கை நிராகரித் போலீனா பின்பு மெல்ல மெல்ல அவரை நெருங்கத் தொடங்குகின்றார்.

காலப் போக்கில் கிளார்க்கிற்கு சிக்காகோ கிரிஸ்டல் போல் டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ளும் கட்டாயம் ஏற்படுகின்றது. இதே வேளையில் கிளார்கின் நடத்தையில் சந்தேகம் கொள்ளும் அவரின் மனைவி ஒரு தனியார் துப்பறிவு நிபுனர் மூலம் கணவரின் இரகசியமான நடன வகுப்புகள் பற்றி அறிந்து கொள்கின்றார்.

போட்டியிற்கு கிளார்க் அவரது ஆசிரியை மிட்சி மற்றும் போலீனாவால் பயிற்று விக்கப்படுகின்றனர். கடைசியாக ஒரு தடவை போலீனாவால் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதன்போது உருவாக்கப்பட்ட நடனக்காட்சிகள் பார்ப்பவரை ஆட்கொள்ளுமாறு மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடனப் பயிற்சியின் போது நடனம் பற்றி போலீனா சொல்லும் சில கருத்துக்களும் அழகானவை. உதாணத்திற்கு அவள் படம்ஆவாள் நீ அதைத் தாங்கும் சட்டமாவாய் நீ செய்வதை அவள் அப்படியே பிரதிபலிப்பாள். இது நடனத்தைப் பற்றி போலீனா கூறுவது.

இறுதியாக கிளார்க் இரகசியமாக வந்த சிக்காகோ போல்ஸ் டான்ஸ் போட்டியில் அவரின் மனைவியும் மகளும் அவரிற்கு தெரியாமல் வந்து அமர்ந்து கொள்கின்றனர். இவர் நடனமாடிக்கொண்டு இருக்கும் போதே தனது துணைவியாரையும் மகளையும் காண்கின்றார். இதன் பின்பு கணவன் மனைவிக்கிடையில் கடும் சண்டை வெடிக்கின்றது.

மனைவியுடன் தொடர்ந்து வாழ்ந்தாரா கிளார்க் அல்லது போலீனாவுடன் சென்றாரா? நடனப் போட்டியில் கிளார்க் வெற்றி பெற்றாரா? போன்ற கேள்விகளுக்கு விடைகாண திரைப்படத்தைப் பாருங்கள்.

இந்தத் திரைப்படம் உண்மையில் ஒரு ஜப்பானிய திரைப்படத்தின் தழுவலாகும். நடுத்தர வயதினரை கவரும் என்பது என் கணிப்பு. எது எவ்வாறாயினும் ஒரு சிறந்த திரைப்படத்தைப் பார்த்த திருப்தி வேண்டு மென்றால் இந்த திரைப்படத்தைப் பாருங்கள். அதிரடி ஆக்ஷன் திரைப்பட இரசிகர்களிற்கான திரைப்படம் இது வல்ல என்பதையும் கருத்தில் கொள்க.

எனக்கு மட்டும் ஏன்????


என்னால் ஏனோ நித்திரைகொள்ள முடியவேயில்லை. கண்களை மூடியவாறு புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன். எவ்வளவுதான் முயன்றாலும் நேற்றய நிகழ்வுகளை என்னால் மறக்கவே முடியவில்லை.

அவள் நேற்றுப் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தச் சிரிப்பு! தலையை அடிக்கடி கொதும் விரல்கள்! நெற்றியில் விழும் அந்த ஒரு தொகுதி கூந்தல்! கண்களை அகல விரித்தவாறு பேசும் அந்தத் தோறனை! எந்தப் பையனும் இதை மறக்கவே மாட்டான். சிங்களத்தை வெறுத்தாலும் இந்த சிங்களத்தியை மட்டும் என்னால் வெறுக்க முடிய வில்லையே.

அது போதாதென்று சிங்கள நண்பர்கள் என்னையும் இனோக்காவையும் ஒன்றாகக் கண்டதும் “ஆகா... அப்பிடியா விசயம் போகுது” என்று சத்தமிட்டது.... நினைத்து மீண்டும் ஒரு தடவை புன்முறுவல் பூத்துக்கொண்டேன்.

காலை கதிரவன் தன் கதிர்களை பரப்பி என் முதுகில் சூடு போடும் வரையில் நித்திரை கலையாத எனக்கு இன்று காலை நான்கு மணிக்கே விழப்பு வந்து விட்டது. ம்... எல்லாம் எங்க போய் முடியப்போகுதோ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். கட கட வென காலைக் கடன்களை முடித்து காலை 6.45 க்கே வீட்டிலிருந்து பல்கலைக்கழகம் புறப்பட்டு விட்டேன்.

போகும் வழியில் எப்பிடி இந்த அழகுப் பிசாசு என் வாழ்வில் வந்து நர்த்தனம் ஆடத்தொடங்கியது என்று நினைத்துப் பார்த்தேன்.

நான் படிப்பது விஞ்ஞாண பீடத்தில் அவள் கற்பது முகாமைத்துவ பீடத்தில். பல்கலைக்கழக டோஸ்ட் மாஸ்டர் கிளப்பில்தான் அவளின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் நல்ல நண்பியாக இருந்தாலும் காலப்போக்கில் ஒருவரை ஒருவர் அறியாமல் ஒருவரில் ஒருவர் அதிக உரிமை எடுக்க தொடங்கிவிட்டோம். உச்சக்கட்டமாக நேற்று தர்மாலோக ஹோலில் எல்லார் முன்னிலையிலும் என்னோடு ரெம்ப நெருக்கமாக உட்கார்ந்து விட்டாள். விசயம் கிசு கிசு என காட்டுத் தீ போல எனது டிப்பார்ட்மென்ட் முழுவதும் பரவிவிட்டது.

சுகததாஸ ஸ்டேடியம் பின் பக்கத்தில் உள்ள அந்த பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டு இருக்கின்றேன்.
தழுகம, களனி கம்பஸ், கிரிபாச்சிய, மகர, கடவத்த, கடவத்த, கடவத்த.... பஸ் நடத்துனர்கள் கூவிக்கொண்டு இருந்தனர். முதலாவது இரண்டாவது மூண்றாவது பஸ்சும் போய்விட்டது. மனது மிகவும் குளப்பமாக இருந்தது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

இன்றைக்கு கம்பஸ் போவதா? வேண்டாமா? போனால் அவளைக் கட்டாயம் சந்திக்க வேண்டுமே?
போகாவிட்டால் பாவம் அவள் டிபார்ட்மென்ட் வாசலில் காத்துக்கொண்டு நிற்பாளே எனக்காக?

இன்னும் குளப்பம் தீரவில்லை. கீழ் உதட்டை மேவாய் பற்களால் அழுத்தியவாறு கண்களை மூடிப் பார்த்தேன் ஏதாவது முடிவு தெரிகின்றதா என்று!!!!

தழுகம, களனி கம்பஸ், கிரிபாச்சிய, மகர, கடவத்த...........

மீண்டும் ஒரு தடவை இன்னுமொரு பஸ் வந்து விட்டது. சரி இப்ப முதலில பஸ்சில ஏறுவம் பேற வழியில என்ன செய்வது என்டு முடிவு செய்வம். பஸ்சில் ஏறிக்கொண்டேன்

“தம்பி எங்க?” சிங்களத்தில் கேட்டான் நடத்துனர்

“கம்பஸ் எக்கெனாய்” (கம்பஸ் ஒருவர்) சிங்களத்திலேயே பதில் கூறினேன்.

சட்டைப் பையில் இருந்து 12 ரூபாயை கணக்காக எடுத்து அவனிடம் கொடுத்தேன். இல்லாவிட்டால் என்ன மாத்தின காசு இல்லையா என்று வழமை போல பிளேடு போடுவான். டிக்கட் ஒன்றை கிழித்து கையில் திணித்து விட்டு

“இஸ்சரா சல்லி கண்ண” (முன்னே இருப்பவர்களே பணத்தை தாருங்கள்) கூவிக்கொண்டே முன்னோக்கி நகர்ந்தான்.

வழமைபொல சாலை நெருக்கடி. பஸ் வண்டி நின்று நின்று அரங்கி அரங்கிச் சென்று கொண்டு இருந்தது. வழமையாக ஐந்து நிமிடத்தில் வந்து விடும் பாலிய கொட சந்தியை இன்று 10 நிமிடத்தில வந்து சேர்ந்தது.

பஸ் நின்றதும் இன்னுமொரு தொகுதி கூட்டம் பஸ்சினுள் அடைபடத்தொடங்கியது. எனக்கு பக்த்தில் ஒரு ஆசனம் ஒருவரும் இல்லாமல் இருந்தது.

“ஹலோ மச்சான்!” இப்ப எனக்கு பக்கத்து ஆசனத்திலிருந்து ஒரு குரல்

“ஆ... ரொமேஸ்” என்னுடன் படிக்கும் சிங்கள நண்பன் ஒருவன்.

இருவருக்குமிடையில் ஆங்கிலத்தில் சம்பாசனை தொடங்கியது

“என்னப்பா நீ நாங்களெல்லாம் எதிர்பார்க்காத காரியத்தில இறங்கிட்டாய். நீ இப்பிடி காதலில விழுவாயெண்டு நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கேல” நக்கலாக கூறினான் அவன்

“டேய்! உங்களுக்கு என்ன விசராடா?. அப்பிடி ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல”.

“ஓ.........! ஒரு மண்ணாங்கட்டியும் இல்லாமத்தான் நேற்று தர்மாலோக ஹோலில அவளோட கதைச்சுக்கொண்டு இருந்தனியாக்கும்”

“ஏனடா! கம்பஸ்ல ஒரு பெட்டையோட கதைச்சா அதுக்குப் பெயர் காதலா?” கொஞ்சம் கோவமாகவே கேட்டேன்.

“நாங்களெல்லாம் எவ்வளவு கதைச்சும் அவள் எங்களோட அவ்வளவு கதைக்கேலயே?. உன்னோட தானே ஒட்டிக்கொண்டு இருந்தவள். நீயும் தானே முப்பத்தி இரண்டு பல்லையும் காட்டி வழிஞ்சு வழிஞ்சு கதைச்சுக்கொண்டு இருந்தனி”

“ரொமெஸ் ஏன் தேவையில்லாத கதையிப்ப?”

“டேய்! டேய்! மனசுக்குள்ள ஆசையை வைச்சுக்கொண்டு மனதுக்கு துரொகம் செய்யாதடா.... எல்லா தமிழ் பொடியங்கள் மாதிரி நீயும் உனக்கு நீயே வேலி போட முயற்சிக்கிறாய்! சரியா?”

“இல்ல மச்சான்........”

“சரி சரி! இப்ப நீ சொல்லு அவளில உனக்கு விருப்பமில்லையா? அவளுக்கு என்ன குறைச்சல் நல்ல வடிவுதானே? அவள் சிங்களம் எதிர்காலம் கஷ்டம் எண்டு மட்டும் யோசிக்காத. நாங்க ஃபுல் சப்போட்ட தருவம்”

“டேய்... இருந்தாலும் என்ற அப்பா அம்மாவுக்கு என்ன... பதில்....”

“நீ என்ன அப்பா அம்மாவை விட்டுட்டு ஓடவா போறாய்? அவையள் இத புரிஞ்சு கொள்ளுவினம். காதலிக்கிறது ஒண்டும் தப்பில்லையே! மற்றது நீ ஒண்டும குட்டி பபா இல்லையே! அம்மா அப்பா என்டு திரிய”

குளம்பி இருந்த குட்டையை நல்லா குளப்பி விட்டான். ஆனால் பாவம் அவன் அதில மீன் பிடிக்க மட்டும் முயலவில்லை. ஏதோ எனக்கு உதவி செய்ய முயலுகின்றான் என்று மட்டும் தெரிந்தது.

“ரொமேஸ்.... இண்டைக்கு காலையில டிப்பார்ட்மென்ட் வாசலில நிக்கிறதா சொன்னவள்டா! தனக்கு கடைசி முடிவை இண்டைக்கு சொல்லோனும் எண்டும் சொன்னவள்டா!”

“அதுக்கென்ன இப்ப? ஏன்தான் இப்பிடி பயந்து சாகிறியோ தெரியாது??” சலித்துக்கொண்டான்.

“அதில்ல மச்சான்..... சரி... நான் எனக்கும் சம்மதம் எண்டு சொல்லுறன்...”

“நான் சொல்லுறன் எண்டு சொல்லாத. நீ விரும்பிறாய் தானே அவள?” நெற்றியை சுருக்கியவாறே கேட்டான்.

“ஓம்!”

“எலகிரி மச்சான்!” அவன் முகத்தில் சந்தோசப் புன்னகை. அட என்முகத்திலும் தான்.

பஸ் கம்பஸ் வாசலில் வந்து நின்றது. நானும் ரொமேசும் பஸ்சில் இருந்து கீழே இறங்கினோம்.

“மச்சான் சொதப்பிடாத!!!!. நான் பின்னால வாறன் ஏதும் ஹெல்ப் எண்டா உடனே கூப்பிடு” கண்களை அகல விரித்தவாறு மிகவும் உற்சாகமாய் கூறினான்.

கம்பஸ் வாசலில் இருந்து நடக்க தொடங்கினேன். இன்னும் ஐந்து நிமிடத்தில் டிப்பார்ட்மென்டை அடைந்து விடுவேன்.

தூரத்தில் அவள் நிற்பது தெரிந்தது. வெள்ளை நிற ஸ்கேட்டும் பிளவுசும் போட்டு அழகான தேவதைபோல இருந்தாள். எனக்கு வாய் நிறைய கொள்ளை சிரிப்பு ஆனால் நெஞ்சு மட்டும் படக் படக் என்று அடித்துக்கொண்டது.

“மம ஒயாட ஆதரேய்.....” (சிங்களத்தில் நான் உன்னைக் காதலிக்கின்றேன்) ஒரு தடவை எனக்குள் கூறிப்பார்த்துக் கொண்டேன்.

இதே வேளை எனது டிப்பார்ட்மென்ட் பெட்டையள் இரண்டு பேர் என்னையும் இனோக்காவையும் பார்த்து விட்டு “குட் லக்........!” எனச் சத்தமாக கூறி சிரித்துக் கொண்டு சென்றனர்.

மேலும் இரண்டடி எடுத்து வைத்திருப்பேன் எனது செல்லிடத் தொலைபேசி சிணுங்கத் தொடங்கியது. எரிச்சலுடன் வெளியே எடுத்துப் பார்த்தேன் அம்மா கோலிங்.... சி.எல்.ஐ காட்டியது!!

உடனே தொலைபேசிக்கு பதில் அளித்தேன். மறு முனையில் அம்மா.

“தம்பி! நீ கேட்டனியெல்லே பி.சி.எஸ் பரீட்சைக்கு 30,000 ரூபா வேணும் எண்டு. நான் என்னோட வேலை செய்யிற ஜெயமாலாட்ட கடனா அந்தக்காச வேண்டி உண்ட கணக்கில பாங்கில போட்டிட்டன். காசை எடுத்து பரீட்சை காசைக் கட்டு. நீ படிக்க வேணும் அதுதான் எங்களுங்கு முக்கியம். உன்ன நம்பி இருக்கிற அந்த பொம்பிளப் பிள்ளயள மறந்திடாத”

“ஏன் அம்மா! நான் இங்க யாராவது சிங்களப் பெட்டைய பாத்திடுவன் எண்டு பயந்திட்டீங்களோ?” புன்னைகையுடன் கூறிவிட்டு அம்மா பதில் அளிக்க முன்னரே தொலைபேசி இணைப்பை துண்டித்தேன்.

சில அடி முன்னுக்கு இனோக்கா நின்று கொண்டு இருந்தாள். நான் பேசியது அவளிற்கு விளங்காது காரணம் அவளிற்கு சத்தியமாகத் தமிழ் தெரியாது.

கிட்ட நெருங்கியதும் அதே வழமையான உள்ளம் கொள்ளைகொள்ளும் புன்னகையுடன் கண்களை அகல விரித்து இமைகளை மேலே உயர்த்தி என்ன பதில் என்று கண்களாலே கேட்டாள். அவளிடம் கடும் நம்பிக்கை இருப்பதை அவள் நின்ற நிலை காட்டியது. கொஞ்சமும் படபடப்பில்லாம் நின்ற கொண்டுடிருந்தாள்.

“ஐம் சாரி இனோக்கா”

“வட்?” சில நாழிகைகள் அதிர்ச்சியில் நின்றிருந்தாள். பிறகு கண்களை மெல்ல புறங்கையால் தடவியவாறு அவ்விடத்தில் இருந்து கட கட என நடக்கத் தொடங்கினாள்.

“இனோக்கா....வெய்ட்...!!!” எதையும் கேட்கும் நிலையில் அவள் இப்போ இல்லை.

பின்னே திரும்பிப் பார்த்தேன் ரொமேஸ் தனது தலையை இது உருப்படாத பயல் என்று பொருள்படும் வண்ணம் ஆட்டியவாறு என்னைக் கடந்து டிப்பார்ட்மென்ட்டுக்குள் சென்று கொண்டு இருந்தான்.

தொடர்பாடல் ஒரு அறிமுகம்! (Communication)

மனிதன் ஒரு தொடர்பாடும் விலங்கு எனக் கூறலாம். மனிதர்கள் எப்போதும் குழுக்களாக வாழவே விரும்புகின்றான். தனியாக வாழ எவரும் விரும்புவதில்லை. குழுவாக வாழும்போது அங்கத்தவர்களிடையேயும் குழுக்களிடையேயும் தொடர்பாடல் செய்ய ஒரு முறைமை தேவைப்பட்டதன் காரணமாகவே தொடர்பாடல் முறைகள் உதயமானது.

தொடர்பாடல் முறைகளானது மனித வர்கத்தின் அளவுக்கு பழைமை வாய்ந்தது என்று கூறலாம். ஆதிகாலத்தில் மனிதன் பின்வரும் முறைகள் மூலம் தொடர்பாடலை மேற்கொண்டான்.
• மேளங்கள்
• நெருப்பு
• அங்க அசைவுகள்

பின்னய காலங்களில் மெல்ல மெல்ல மொழிகள் விரிவாகத் தொடங்கியது. முதலில் பேச்சு வடிவம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தபோதும் பின்னர் மெல்ல மெல்ல எழுத்து வடிவமும் காலத்தின் தேவையுடன் உருவாக்கப்பட்டது.

இன்று நாம் என்றுமே இல்லாத அளவுக்கு தொடர்பாடல் தொழில் நுட்பத்தை பயன் படுத்துகின்றோம். இதன் உச்சக் கட்டமாக இணையத்தை பயன் படுத்துவதைக் கூறலாம். இன்று இணையம் தொடர்பாடலில் இருத்த பல தடைக்கற்களை தகர்த்து எறிந்து விட்டது என்று கூறினால் அது மிகையாகாது.

பொதுவாக நாம் ஏன் தொடர்பாடல் செய்ய விரும்புகின்றோம் என யோசித்துப் பார்த்துண்டா?. பின்வருவனவற்றில் ஒன்றிற்காக அல்லது பலதிற்காக அல்லது அனைத்துக்குமாக.
• எமது எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றை பகிர்ந்து கொள்ள
• திறமைகளை (Skills) மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள, புதியவற்றை அறிந்து கொள்ள
• மற்றவர்களை அறிவுறுத்த அல்லது வழி நடத்த
• பொழுதுபோக்கு மற்றும் நேரம் கடத்த (இது பெண்களுக்கான சிறப்புத் தேவை!!!!)

பிரதானமாக இரண்டு வழிகளில் தொடர்பாடல் மனிதனால் மேற்கொள்ளப்படுகின்றது.
1. ஒலி – பேச்சு, ஒலிகளைப் பயன் படுத்தல்
2. காட்சி – படங்கள், குறியீடுகள், நிறங்கள்

தொடர்பாடலுக்கு தேவையான முக்கிய விடயதானங்கள்
1. அனுப்புனர்
2. ஊடகம்
3. பெறுனர்

உதாரணத்திற்கு ஒரு கடிதத்தை எடுத்து கொள்ளுங்களேன். இங்கு கடிதம் எழுதுபவர் அனுப்புனர். கடிதத்தை காவிச்செல்லும் தபால் சேவை ஊடகம். கடிதத்தை பெறுவர் பெறுனர். இங்கு அனுப்புனரின் கடமை தான் அனுப்பும் செய்தி பெறுனருக்கு புரியும் வகையில் எழுதுவது. பெறுனர் அனுப்புனரின் செய்தியை புரிந்து கொள்ளாவிடின் முழு தொடர்பாடலும் பயனற்றதாகி விடுகின்றது. சில ஊடகங்கள் செய்தியை குளப்பும் தன்மைகொண்டவை உதாரணமாக சிற்றலை வரிசை ஒலிபரப்புகள் காலநிலையால் குளம்புகின்றனவே அதைக் குறிப்பிடலாம்.

தொடர்பாடலானது ஒரு திறமை என்றும் சிலர் அது ஒரு கலை பிறவியிலேயே வரவேண்டும் என்றும் கூறுவர். இது சிறிது சிக்கலான கேள்வியே!. இரண்டும் இருந்தால் தான் ஒருவர் சிறந்த தொடர்பாடல் செய்ய இயலும். உதாரணமாக பல மொழிகளை தெரிந்தவர் சிறந்த தொடர்பாடல் செய்ய கூடியவராக இருப்பார் எனக்கூற முடியாது. இதே வேளை தமிழை இரண்டாம் மொழியாகப் பயின்ற ஒருவன் தமிழிலே தமிழனை விட அழகாக தொடர்பாடல் செய்யலாம். இது ஒருவனுடைய குணவியல்பு மனோநிலமை என்பவற்றில் தங்கி இருக்கும்.

எதையும் பகுத்து பார்க்கும் திறமை உடையவர்களும் சிறந்த தொடர்பாடல் செய்யக் கூடியவர்களாக இருப்பர். புதிய மொழிகளை படித்தல், உச்சரிப்புகள், நுட்பங்கள் எல்லாமே இரண்டாம் பட்சமே.

மனிதனின் தொடர்பாடலுக்கான மற்றும் தனித்து இருக்க முடியாமல் இருக்கும் தன்மைக்கு அமேரிக்க ரஸ்ய பனிப்போர் நேரத்தில் நடந்த ஒரு கதையைக் கூறினால் இங்கே தகும்.

அதாவது ஒரு ருசிய ஒற்றன் சி.ஐ.ஏ யிடன் முறையாக மாட்டிக் கொண்டான். அப்போது அவனை பல வழிகளில் கடுமையாக விசாரித்தும் அவன் வாய் திறக்க வில்லை. அப்போது அவன் யாருடனும் பேசமுடியாத இருண்ட சிறைக் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டபோது சரியாக இரண்டாவது நாளே தான் பேசத் தயார் எனக் கூறி தான் அமேரிக்கா வந்த நோக்கத்தினை சி.ஐ.ஏ அதிகாரிகளுக்கு தெளிவாகக் கூறிவிட்டான்.

இந்த உதாரணத்தில் இருந்து என்ன தெரிகின்றது மனிதன் தனித்து வாழ முடியாத ஒரு ஜந்து. தொடர்பாடல் இல்லா விட்டால் மீண்டும் மனிதன் கற்காலத்திற்கு போய்விடுவான் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. அதனால காலாகாலத்திற்கு அம்மாவிற்கோ மனைவியிற்கோ யாராவது நீங்க விரும்புபவர்களிற்கு கடிதம், மின்னஞ்சல் அட்லீஸ் ஒரு காலாவது போட மறக்காதீங்க!!!!

உலகின் முதலாவது தமிழர் வான்படை களத்தில் இறங்கியது!

யாழ். பலாலி சிறிலங்கா படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பலாலி படைத்தளம் மீது வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் விடுதலைப் புலிகள் தங்களது விமானம் மூலம் ரொக்கெட்டுக்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் ஒரு விமானம் ஈடுபடுத்தப்பட்டதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விமானத் தாக்குதலைத் தொடர்ந்து பலாலி படைத்தளத்திலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தி வந்த எறிகணைத் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.
"எமது தாயகத்தையும் மக்களையும் பாதுகாக்க எமது முப்படையினரையும் நாம் பயன்படுத்துவோம்" என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன் அறிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தினரின் முன்னரங்க நிலைகளையொட்டிய இராணுவ முகாம்களுக்கு அருகாமையில் உள்ள பொதுமக்கள் இடம்பெயர்ந்து செல்லுமாறு விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான புலிகளின் குரல் வேண்டுகோள் விடுத்து வருகிறது.
எழுதுமட்டுவாள், புலோப்பளை, கிளாலி, கொடிகாமம், கச்சாய், வரணி ஆகிய இடங்களில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் 1 கிலோ மீற்றர் தூரம் இடம்பெயர்ந்து செல்லுமாறு வேண்டுகோள் புலிகளின் குரல் வானொலியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.