சேவிங் பிரைவேற் றியான் (1998) திரைவிமர்சனம்

நாம் நாளாந்தம் பல திரைப் படங்களைப் பார்க்கின்றோம் ஆனாலும் சில திரைப்படங்களே மனதில் நச்சென்று பதிந்து விடுகின்றன. இதற்கு காரணம் கதையமைப்பு, தொகுப்பு, இயக்கம், இசை, ஒளியமைப்பு என அனைத்து காரணிகளும் சிறப்பாக அமையவேண்டும். இவ்வாறு அனைத்தும் சிறப்பாக அமைந்து அடிமனதை வருடிச்செல்லும் திரைப்படமே ஹொலிவூட்டின் தயாரிப்பான சேவிங் ப்ரைவேற் றியான் (1998).

இத் திரைப்படத்தின் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பில்பேர்க். இவரைப் பற்றி சொல்லத்தேவையில்லை யுராசிக்பார்க், ஏ ஐ, வோர் ஒவ் த வேல்ட், மைனோரிட்டி ரிப்போர்ட் போன்ற திரைப்படங்கள் மூலம் முழு உலகையும் மெய் சிலிர்க்க வைத்த இயக்குனர் நாயகம். திரைப்படத்தின் நாயகன் டாம் ஹாங். இவரும் பிரபலமான ஹொலிவூட் நட்சத்திரம். தற்போது வெளியாகி வசூலில் சக்கைபோடும் த டா வின்சி கோட் எனும் திரைப்படத்தின் நாயகனும் இவரே!.


இரண்டாம் உலகயுத்தம் வரலாற்றிலே மறக்கப்பட முடியாத யுத்தம். இந்த போரினால் உலக நாடுகளின் எல்லைக்கோடுகள் மீள் நிர்ணயம் செய்யப்பட்டது, பல கோடான கோடி மக்கள் தமது தாயகம் விட்டுப் புலம் பெயர வைத்தது. உலக வல்லரசான பிருத்தானியா தன் நாமத்தை றுசியாவிடமும் அமேரிக்காவிடமும் பறிகொடுத்தது. இதுவே உலகம் சந்தித்த இறுதியான பயங்கர யுத்தம். இந்த திரைப்படத்தின் கதையும் இரண்டாம் உலக யுத்தத்தின் முக்கியமான இறுதி கணங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.


திரைப்படத்தின் ஆரம்பம் காற்றிலே படபடக்கும் அமேரிக்க தேசியக் கொடியுடன் ஆரம்பிக்கின்றது. ஒரு வயோதிபர் போர் நினைவாலயத்தில் தன் நிலை மறந்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கல்லறைகளுடாக நடப்பதையும், பின்னர் ஓர் இடத்தில் உட்கார்ந்து உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுவதையும் அவரை தேற்றும் உறவினர்களையும் காட்டுவதுடன் படம் மெல்ல மெல்ல வேகம் கொள்ளத் தொடங்குகின்றது. அந்த வயோதிபரின் நினைவலைகளுடன் எம்மையும் இயக்குனர் 1944 ம் ஆண்டிற்கு அழைத்துச் செல்கின்றார்.

நினைவுகள் மயிர் கூச்செறியும் ஒரு தரையிறக்கத்துடன் ஆரம்பிக்கின்றது. கடல் அலைகளைக கிழித்துக் கொண்டு துருப்புக் காவிகள் விரைகின்றன. சில நிமிடங்களில் தரையிறக்கம் என் படகோட்டி அறிவிக்கின்றான். கடற் பயணத்தின் கடுமை தாங்க முடியாமல் சில வீரர்கள் சத்தி (வாந்தி) எடுக்கின்றனர். காப்டன் மில்லர் (டாம் ஹாங்) தலமையில் தரையிறக்கம் ஆரம்பிக்கின்றது. நோர்மாண்டியின் ஒமாகா கடற்கரையில் அமேரிக்க நேசப் படைகள் தரையிறங்க முயற்சி செய்வதையும் அதை தடுக்க நாசிக்கள் செய்யும் பதில் தாக்குதலையும் அழகாக படம் பிடித்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் அமேரிக்க வீரர்கள் தரையிறங்க முடியுமா எனும் ஒரு கேள்வி நம் மனதில் எழுவதைத் தடுக்க முடியாது. போர் களத்தின் ஒவ்வொரு கட்டமும் குறிப்பாக காயமடைந்த வீரர்கள் படும் அவலத்தையும் பார்க்கும்போது கண்களை மூடிக்கொண்டு விடவேண்டும் போல் இருக்கும். இந்த தரையிறக்கத்தை நடத்துவதுதான் மிகப் பெரிய காரியம் என நினைத்திருந்த கப்டன் மில்லருக்கு இதைவிட பெரிய ஒரு பணி தன்மேல் விழப் போகின்றது என்பதைத் தெரிந்து வைத்திருக்க சந்தர்ப்பம் இல்லை.

இதே வேளையில் நான்கு ஆண் பிள்களின் தாயார் தன் மூன்று புதல்வர்களை கிட்டத்தட்ட ஒரே காலப் பகுதியில் இழந்து விடுகின்றாள். தற்செயலாக இந்த தகவலை வீரர்களின் மரணம் பற்றி அறிவிப்பு செய்யும் பகுதியில் கண்டறிகின்றனர். ஒரே நேரத்தில் தாய் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்து விட்ட காரணத்தால் நான்காவது மகனை (றியான்) போர்களத்திலிருந்து மீட்டு வந்து தாயிடம் ஒப்படைப்பதாக இராணுவ மேலிடம் முடிவு செய்கின்றது.

இந்தப் பணிக்கு கப்டன் மில்லர் தேர்ந்து எடுக்கப்படுகின்றார். கப்டன் மில்லர் தலமையில் எட்டு வீரர்களைக் கொண்ட படை அணி ஒன்று புறப்படுகின்றது. எதிரியின் எல்லைக்குள் நின்று கொண்டிருக்கும் றியானை கப்டனும் அவரது சகாக்களும் தமக்கு கிடைக்கும் துப்புக்களைப் பயன்படுத்தி தேடவிழைகின்றனர். நேசப் படைகள் ஒமாகா கடற்கரையிலேயே நிலைகொண்டிருக்கும் வேளையில் எதிரிகளின் எல்லையை ஊடறுத்து மில்லரும் அவரது படையணியும் முன்னேறுகின்றது.

நேரம் செல்லச்செல்ல நாமும் மில்லரின் படையனியும் ஏதோ ஒரு பிணைப்பால் இணைக்கப் பட்டு விடுகின்றோம். பல கஷ்டங்களினூடு செல்லும் அவர்கள் துன்பங்களில் அழும்போது நாமும் அழுகின்றோம், சிரிக்கும் போது நாமும் சிரிக்கின்றோம். இதே வேளை ஒரு தனி மனிதனுக்காக எமது உயிரை பணயம் வைக்க வேண்டுமா என ஏனைய வீரர்கள் குழம்புகின்றனர். இந்த இடத்திலேயே கப்டன் மில்லரின் ஆளுமையை அழகாக காட்டப் பட்டுள்ளது. மற்றய வீரர்கள் வேண்டாம் எனும் போது அதை மறுத்து தான் எடுக்கும் முடிவுகளை ஏனைய வீரர்களை ஏற்றுக் கொள்ளச் செய்யும் விதம் அருமையாக உள்ளது.


றியானை சந்தித்தார்களா இல்லையா என்பதும் எத்தளை வீரர்கள் தாயகம் திரும்புகின்றார்கள் என்பதுமே மிகுதிக் கதை. முன்னைய பகுதிக்கு எவ்விதத்திலும் குறைந்து விடாமல் பின்னய பகுதியும் மிகப் பரபரப்பாகவே நகர்கின்றது.

இவ்வளவு பேசிவிட்டு திரையின் பின்னணியில் நடந்ததைப் பற்றி பேசாது விடின் அது அடுக்காது. இங்கு பயன் படுத்துவதற்காக துப்பாக்கிகள் மற்றும் சுடுகலன்களை இங்கிலாந்து மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகளில் இருந்து பெற்றுக்கொண்டனர். இவை அனைத்தும் கிட்டத்தட்ட உலக யுத்தம் இரண்டு காலப்பகுதியைச் சேர்ந்ததே. இதைவிட உடைகளிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளனர். ஆயிரக்கணக்கில் படத்திற்காக இராணுவச் சீர் உடைகளும் காலணிகளும் தயார் செய்யப்பட்டதோடு அவை போர்களத்தில் பாவிக்கப்பட்டவை போன்ற தோற்றம் பெற விஷேட பொறிமுறைகளிற்கு உட்படுத்தப்பட்டது. டோம் ஹாங் மற்றும் அவருடன் நடிப்பவர்கட்கு இராணுவ பயிற்சி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவர்களிற்கு இராணுவப் பயிற்சி வழங்கிய முன்னாள் இராணுவ அதிகாரி கருத்து தெரிவிக்கையில் நடிகர்கள் யாவரும் பயிற்சிக்காக சாதாரண இராணுவ வீரன் போல் நடத்தப்பட்டனர். இவர்கள் சேற்றிலே உருண்டார்கள், முள்ளுக் கம்பிகளூடாக தவள்ந்தார்கள் எனக் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு காட்சியும் அங்குலம் அங்குலமாக கதைக்கேற்றவாறு அழகாக படம்பிடிக்கப்பட்டுள்ள இந்த அருமையான படம் என்னை மட்டுமல்ல உங்களையும் கவரும் என்பதில் ஐயம் இல்லை. இதனால் தான் என்னவோ பல ஒஸ்கார் விருதுகளையும் இந்தத் திரைப்படம் தட்டிக்கொண்டது.

இதுவே என்னைக் கவர்ந்த ஹொலி வூட் திரைப்படங்களில் இன்றும் முதலிடத்தில் உள்ளது. உணர்வுகளுடன் விளையாடும் எந்தப் பொருளையும் எம்மால் மறக்க முடிவதில்லைதானே???

16மறுமொழிகள்:

Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) மொழிந்தது...

மயூரேசன், இந்தக் கறுப்புப் பின்னணியை மாற்றுங்களேன்.. வாசிக்கக் கஷ்டமா இருக்கு.

Enemy at the Gate படம் கிடைத்தால் பாருங்கள். போரை மையமாகக் கொண்ட சுவாரசியமாகச் செல்லும் இன்னொரு திரைப்படம்.

1:11 pm  
Anonymous Anonymous மொழிந்தது...

மயூரேசா,
அது "பிறைவேற் றையன்" என்றிருக்க வேண்டும். :-)

1:57 pm  
Anonymous Anonymous மொழிந்தது...

மயூரேசா!
இப் படம் எனக்குப் பிடித்த படத்திலொன்று; மேற்கத்தைய போர் படங்கள் இயற்கையாக இருக்கும்.எல்லோருக்கும் ராணுவப் பயிற்ச்சி இருப்பதால் உணர்ந்து நடிக்கிறார்களோ! தெரியவில்லை. இது ஒரு விறுவிறுப்பான படம்; சில காட்சிகள் சற்றுக் கடினமானவை. நான் இரசித்த படம்.
யோகன் பாரிஸ்

3:24 pm  
Anonymous Anonymous மொழிந்தது...

ஆனால்!
போரின் அவலங்களைத் தெரிந்தும் புரிந்தும்; போர்களை உருவாக்குவதிலும்; போர்த் தளபாடங்களை உருவாக்குவதிலும் அமெரிக்கா காட்டும் அதீத அக்கறை புரியவில்லை.
யோகன் பாரிஸ்

3:47 pm  
Blogger Jay மொழிந்தது...

//கறுப்புப் பின்னணியை //
டெம்பிளேட்டை மாற்றினால் எல்லா நான் கஷ்டப் பட்டு செய்த எடிட் எல்லாம் போய்விடுமே!
விரைவில் மாற்றுகின்றேன்

//அது "பிறைவேற் றையன்" என்றிருக்க வேண்டும். :-)//

தப்புக்கு மன்னியுங்க :-)

//johan -paris
திரைப்படமும் அரசியலும் வேறு வேறு யோகன் பாரிஸ். உலக சமாதானத்திற்காக பாடுபடும் ஜப்பான்தான் உலகில் அதிகமாக துப்பாக்கி செய்கின்றார்கள். காலம் கலிகாலம் அப்பா!

காட்டியோடு ஒன்றி நடிக்க அவர்கள் படத்திற்காக எடுத்துக் கொள்ளும் பிரத்தியோக முயற்சிகளே முக்கிய காரணம் என நான் நினைக்கின்றேன். நம்ம நடிகர்கள் ஒரு வருடத்தில 10 படம் நடித்து விடுவார்கள் பின்பு எப்பிடி படத்துடன் ஒன்றி நடிப்பது?????

4:06 pm  
Anonymous Anonymous மொழிந்தது...

அழகான திரைவிமர்சனம்....
தொடருங்கள் அன்பரே!
ராஜேஸ்

11:06 am  
Blogger வசந்தன்(Vasanthan) மொழிந்தது...

என்னைப்பொறுத்தவரை பின்னணியை மாற்றத் தேவையில்லை. இதுவே நன்றாக இருக்கிறது.
எனக்கும் பிடித்த படம். ஷ்ரேயா சொன்ன Enemy at the Gate உம் பிடித்த படம். பதுங்கிச் சுடும் வீரர்களை மையமாக வைத்து வந்த படங்கள் பொதுவாகவே எனக்குப்பிடிக்கும். நான் ஆச்சரியப்படுவது, எப்படி இவர்கள் நிஜ போர்க் காட்சியைத் திரையில் கொண்டுவருகிறார்கள் என்று.

12:03 pm  
Blogger Jay மொழிந்தது...

நன்றி வசந்தன்....
மாற்றாமல் விடுவதே நன்று என நினைக்கின்றேன். ஸ்ரேயா தனகு பிரைட்டஸ் ஐ கூட்டிப் பார்க்கலாம்....
ஆம் வசந்தன் நீங்கள் கூறியது போல அவர்கள் படத்துடன் ஒன்றி இணைந்து நடிப்பதுடன் பணத்தை இறைக்கவும் தயங்குவதில்லையே!!!!
Enemy at the gate இன்னும் பார்க்கவில்லை விரைவில் பார்ப்பதாக உத்தசம்.

12:11 pm  
Anonymous Anonymous மொழிந்தது...

Very good...
write an review of the movie Beautiful mind
Thankesh Kumar

8:58 pm  
Blogger Jay மொழிந்தது...

Yes I haved watched the movie. Its really nice. I should write review on that movie..

9:28 pm  
Anonymous Anonymous மொழிந்தது...

இப்படத்தில் tom hanks மட்டுமில்லை என்றால் இவ்வளவுக்கு வெற்றி பெற்று
இருக்குமா என்றால் சந்தேகமே இவரது நடிப்பே என்னை கவர்ந்தது
இவரது cast away நடிப்பை பார்த்தால் கமல் 16 வயதினிலே வந்தது போன்று
இருக்கும் தனி ஒரு மனிதன் இரண்டு மணி நேரம் கதையை நகர்த்த
முடியுமா. இவரது terminal அசத்தல் நடிப்பு

செல்வா

10:26 pm  
Blogger Jay மொழிந்தது...

ஆம் செல்வா! நீங்கள் கூறியது உண்மையே!
காஸ்ட் அவே படம் பார்த்தேன். றோபின்சன் குறோசோவின் கதையை ஞாபகப் படுத்தினாலும் அவரின் நடிப்பிற்கு முன்னால் யாரும் நிற்க முடியாது.. நான் அவரின் பரம இரசிகன் ;-)

5:13 pm  
Blogger thamillvaanan மொழிந்தது...

வணக்கம் மயூரேசன்,

நல்ல விமர்சனம். நான் இப்படத்தை முன்னர் பார்த்திருக்கிறேன். தரையிறக்க காட்சியின் போது படமா அல்லது நிஜமா? என மயிர்க்கூச்செறியும் காட்சிகள். சந்தர்ப்பம் கிடைத்தால் இன்னொரு தடவை பார்க்கவேண்டும்.

உங்கள் தரமான விமர்சனத்திற்கும் அதனோடான பின்னனி தகவலுக்கும்
நன்றி.

அன்புடன்
தமிழ்வாணன்

6:52 pm  
Blogger Jay மொழிந்தது...

நன்றி தமிழ் வாணன்!
இந்த தரையிறக்கக் காட்சிதான் எல்லோரையும் கலக்கியிருக்கின்றது போல இருக்கின்றது.

4:55 pm  
Blogger Senthu VJ மொழிந்தது...

பார்க்கும்போதே அருமையாக இருந்தது. விமர்சனம் இன்னும் அழகூட்டியது.

10:40 pm  
Blogger Jay மொழிந்தது...

நன்றி செந்தூரா!
நீ என் வலைப்பதிவிற்கு வந்ததில் மகிழ்ச்சி. இப்போது எனது பாடசாலை நண்பர்கள் கூட என் வலைப்பதிவிற்கு வருவதில் மகிழ்ச்சி...

9:43 am  

Post a Comment

<< முகப்பு