நினைவுகள் - இரண்டாம் பாகம்

எனது முதல் நினைவுகளை முன்னர் உங்களுடன் பகிர்ந்திருந்தேன் இப்போது இரண்டாம் பாகம் வழமைபோல தேதி வாரியாக இல்லை ஏதோ எழுதும் போது ஞாபகத்திற்கு வரும் ஒழுங்கிலே எழுதுகின்றேன். நிஜம் மட்டுமே இங்கு கிடைக்கும் சுவாரசியமல்ல.....

ஆசிரியர்கள் இந்த சமூகத்திற்கு கிடைத்தற்கு அரிய பொக்கிசங்கள். சரஸ் ரீச்சர் அவ்வாறான பொக்கிசம் ஒன்றுதான். என் சிறுவயது ஆசிரியர் சரஸ் ரீச்சர். எனது வகுப்பாசிரியராய் இல்லாவிட்டாலும் பல தடவை எமக்கு படிப்பித்து இருக்கின்றா. “சரஸ் ரீச்சரிட்ட மாட்டி குடுக்கட்டா” என்று வெருட்டினால் எமக்கெல்லாம் ஒன்னுக்கு போகாத குறையாக வெருண்டுகொண்டு இருப்போம்.

ஒரு தடவை நான் எனக்கு பக்கத்தில இருந்த பொடியனுக்கு ஏதோ சொல்ல அவன் பகிடியாக எனக்கு அடிக்க அதை நான் உண்மையாக எடுத்துக்கொண்டு என் பென்சில் பெட்டியை திறந்து என் பென்சில எடுத்து ஒரு பச்சக்........!. அவ்வளவுதான் இரத்தம் குபு குபு என ஓடத்தொடங்கியது. டேய் சொரிடா!, தேற்ற முயற்சித்தேன், மானத்தை விட்டு கெஞ்சிப் பார்த்தேன். மஹும் அவன் மசியவே இல்லை. அழுதுகொண்டு சரஸ் ரீச்சரிடம் முறையிட்டான். எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. விழப்போகின்ற அடியை நினைத்தால் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மேசையில் இருந்த மூங்கில் பிரம்பைப் பார்த்தேன். அது என்னைவிடப் பெரியதாக இருந்தது...

முன்னுக்கு இருந்து ரீச்சர் என்னை வரச்சொல்லி சைகை செய்வது எனக்குத் தெரிந்தது. சங்கு ஊதப்படப்போகின்றது என்பது மட்டும் வடிவாகத் தெரிந்தது. கிட்டப்போய் தலையை குனிந்து கொண்டு நின்றேன்!.

“என்னப்பு உன்னோட சொறிஞ்சவனா?” பக்கத்தில இருந்த பொடியனக் கேக்கிறா எண்டு பார்த்தா கேட்டது என்னத்தான். விடுவேனா நான்... அதுக்குப்பிறகு என்ன அவனுக்கு நல்ல பேச்சு விழுந்தது. என்னப்பற்றி சுமார் 6 மாதங்களுக்கு முன்பும் அம்மாவோட கதைத்தாவாம். இப்பெல்லாம் அவ என்னோட கதைக்கிறதில்ல காரணம் அந்த ஆசிரிய விளக்கு என்றும் அணையாத இறை விளக்குடன் இரண்டறக் கலந்துவிட்டது. கொடிய கான்சர் அவரைக் காவு கொண்டுவிட்டது.

ஒரு தடவை அம்மா, அப்பா அனைவரும் யாழ்ப்பாணம் சென்று விட்ட வேளையில் என்னையும் தங்கச்சியையும் பெரியப்பா வீட்டில் விட்டுச்சென்றனர். அந்த சமயத்தை இப்பவும் என்னால மறக்க ஏலாது. அம்மா மற்றும் அப்பா இல்லாததால் வீடு எனது முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது (வாழ்க்கையில் முதல் தடவையாக). ஆகவே நண்பர்களின் இளைப்பாறுமிடமாகவும் வீடியோ கேம் விளையாடுமிடமாகவும், அப்பப்ப படம் பார்க்கும் தியேட்டராகவும், மொத்தத்தில் ஒரு ரெஸ்ட் கவுஸ் ஆக எங்கட வீடு மாறியது. ஒரு நாள் வீட்டை கூட்டுவதற்காக பெரியப்பா வீட்டில இருந்து எங்கட வீட்டிற்கு வந்த தங்கை வீடு இருந்த கிடையைக்கண்டு திகைத்து விட்டாள் அந்தளவு குப்பை மேடாக கிடந்தது.

இது போதாதென்று பக்கத்து வீட்டு அன்டி வேற தங்கையிடம். “உங்கட அண்ணா அம்மா அப்பா வீட்டில இல்லாட்டியும் நண்பர்களை கூட்டிக்கொண்டு வந்து கொம்பைன் ஸ்டடி போடுறார்”. அப்பிடியே தங்கச்சி அன்ரிய கூட்டிக்கொண்டு போய் வீட்டைச் சுற்றிக்காட்டி விட்டாள். அவ்வளவுதான் அதுக்குப் பிறகு அந்த அன்ரி என்ன காணும் போதெல்லாம் “தம்பி! கோம்பைன் ஸ்டடி எப்படீ?” என்று கேட்கும் அளவிற்கு நிலமை மோசமாகிவிட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் தான் நான் வாழ்க்கையில் முதல் தடவையாக பெரியப்பாவின் கையெழுத்தை நான் போட்டேன் (அப்பாவின் கையெழுத்தை வெற்றிகரமாகப் பல தடவை போட்டிருக்கின்றேன்). காலை 5.30 க்கு வகுப்பு வைப்பார் என் ரியூசன் ரீச்சர் தனம் அக்கா(இவர் பற்றிய மேலதிக தகவலுக்கு முதலாம் பதிவைப் பார்க்கவும்). எனக்கு காலையில் எழும்புவுது கொலைக் களத்திற்குப் போவதைப் போலாகும். அதனால் சில வேளைகளில் கட் போட்டுவிட்டு வீட்டிலே துங்கிவிடுவேன். அப்படி ஒரு நாள் கட் போட்ட வேளையில் நான் தனம் ரீச்சரிடம் மாட்டுப்பட்டு விட்டேன்.

“மயூரேசன்! எழும்படா.... பூனை மாதிரி வந்திருக்கிறாய் என்ன?. போய் ஏன் நேற்று காலம்பிறக் கிளாசுக்கு வரேல எண்டு அப்பாட்ட லெட்டர் வேண்டிக்கொண்டு வா...”

“ரீச்சர்! அம்மா அப்பா இரண்டு பேரும் யாழ்ப்பாணம் போயிட்டினம்”

“இப்ப பெரியப்பபாவோட தானே இருக்கிறாய்?... பெரிப்பாவிட்டையே லெட்டரை வாங்கிக்கொண்டு வா.. போ... கண்ணுக்கு முன்னால நில்லாத”

எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அப்பாவின்ற லெட்டர் எண்டால் நானே எழுதி குடுத்து விடுவேன் ஆனால் பெரியப்பாவின் கையெழுத்தை எப்படிப் போடுவது. மாட்டுப்பட்டால் அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?. இவ்வாறு பல சிந்தனைகள் என்னைச்சுற்றி கிலியூட்டியவாறே பறந்து திரிந்தது. இறுதியில் முடிவு எடுத்தேன் கையெழுத்து போடுவதில்லை என்று.

ஆனால் ஒவ்வொரு நாளும் காலையில் என்னை எழுப்பி மயூரேசன் நீ லெட்டர் இல்லாட்டி கிளாசுக்கு வராத என்று விரட்டி விட்டார். எனக்கென்ன போக்கிடமா இல்லை. திருமலை நகரில் இருக்கும் அழகான கடற்கரைக்குச் செல்வேன். இரு குண்றுகள் போன்ற அமைப்பு அவற்றிட்கிடையில் கடல் நீர். கரையிலே பரந்த மணற்பரப்பு இதைவிட வேறு என்ன வேண்டும்?. அதிகாலையில் கடற்கரையில் தேகாப்பியாசம் செய்பவர் தியானம் செய்பவர் என ஒரு கூட்டமே இருந்தது. அவற்றையும் அழகான சூரியோதயக் காட்சியையும் ரசிக்க கற்றுக்கொண்டேன். அத்துடன் பல் வேறு காரணங்களுக்காக ரீச்சரால் துரத்தப்படும் ஒரு குழுவும் என்னோடு இணைந்து கொள்ளும் (குணா-மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்வதாக கேள்விப்பட்டேன், தேவானந்-இப்போ இலங்கை டெலிகொம்மில் வேலைசெய்கின்றான், விஜிதன்-கனடா போய்விட்டான் என்று சொன்னார்கள், சுதர்சன்- இவன்தான் வகுப்பின் ஜோக்கர், மற்றும் சிலர்). இப்படியே அவர் என்னைக்கலைப்பதும் பின்னர் நான் கடற்கரைக்குப் போவதுமாக இரண்டு வாரம் கழிந்தது. எனக்கு இதற்குமேலும் வகுப்புகளைப் பகிஷ்கரிக்க விருப்பமில்லை. அதாவது படிக்க ஆர்வம் வந்து விட்டது என்று வையுங்களேன்!

நான் செய்தது எல்லாம் பெரியப்பாவின் போலி கையெழுத்திட்ட கடிதத்தை தயாரித்து தனம் அக்காவிடம் கொடுத்ததுதான். அதைப்பார்த்த ரீச்சர் இவன் தில்லு முல்லு செய்து விட்டான் என்று தெரிந்து கொண்டுவிட்டார்.

“டேய்! உண்மையைச் சொல்லு இது பெரியப்பாவின்ட லெட்டர் இல்லத்தானே?”

“இல்ல அவர்தான் எழுதினவர்!”

“நீ எனக்கு பூ சுத்துறாய் என்ன?. நான் பெரியப்பாவிடம் நேரடியாக தொடர்பு கொள்கிறேன்” என்று கூறி லெட்டரை வாங்கி தன்னுடன் வைத்துக்கொண்டார்.

அதே ரியூசனில் சிறிய வகுப்பில் படித்த என் தங்கை முலமாக பெரியப்பாவிற்கு அறிவித்து விட்டார் விசயத்தை. பிறகு என்ன என்ட மானம் கப்பல் ஏறியதுதான் மிச்சம். இப்பவும் பெரியப்பாவுடன் கதைக்கும் போது அந்த நினைவுகள் வந்து சங்கடப்படுத்தும்.........

ஒரு தடவை விஞ்ஞாண பாடப் (அதுதான் தமிழ் நாட்டில் அறிவியல் பாடம்) பரீட்சை பேப்பரை எப்படி மீட்டோம் (பிராஜக்ட் வெப்பவியல் என்று வைப்போமே) என்றும் நர்சரியில் என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றியும் அடுத்த பதிவில் கூறுகின்றேன்....

யுனிகோட் தமிழில் உள்ளிட (தட்டச்சிட)

உங்கள் பிரவுசரில் தமிழில் டைப் செய்ய வேண்டுமா? ரொம்ப சுலபம்!எ-கலப்பை என்ற சாஃப்ட்வேரைப் பயன்படுத்துங்கள். எ-கலப்பையை
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3என்ற முகவரியிலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.மேற்கண்ட வலைப்பக்கத்தில் மூன்று வகை சாஃப்ட்வேர்கள் கிடைக்கின்றன:அஞ்சல், பாமினி, தமிழ்நெட்99.உங்களுக்குத் தமிழ் தட்டச்சு முறை (யளனகபக) தெரியாது என்றால் eKalappai 2.0b (Anjal) என்ற இணைப்பை க்ளிக் செய்து டவுன்லோட் செய்யுங்கள்.எ-கலப்பையை இன்ஸ்டால் செய்ய...முதலில் இங்கேhttp://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=3 க்ளிக் செய்து உங்கள் டெஸ்க்டாப்பில் சேமித்துக்கொள்ளுங்கள்.அது zip ஃபைலாக டவுன்லோட் ஆன பின் அதை unzip செய்யுங்கள். இப்போது உங்கள் டெஸ்க்டாப்பில் ekalappai20b_anjal.exe என்ற ஃபைலைப் பார்க்கலாம். அதை டபுள்க்ளிக் செய்யுங்கள்.

வலப்பக்க ஓரத்திலுள்ள Install என்ற பட்டனைத் தட்டுங்கள்.அடுத்து வரும் பெட்டியில் Next என்ற பட்டனைத் தட்டுங்கள்.இதையடுத்து வரும் பெட்டியில் I accept this license என்ற வாக்கியத்திற்கு முன் உள்ள குட்டிப் பெட்டியில் க்ளிக் செய்து டிக் செய்யுங்கள்.பிறகு Next-ஐத் தட்டுங்கள்அப்புறம் இன்னொரு முறை Next. இதற்குப் பின் எ-கலப்பை இன்ஸ்டால் ஆகிவிடும்.அடுத்து வரும் பெட்டியில் Close-ஐ க்ளிக் செய்யுங்கள். இன்னும் ஒரே ஒரு க்ளிக் பாக்கி இருக்கிறது.

அடுத்த பெட்டியில் Finish பட்டனை க்ளிக் செய்யுங்கள்.இப்போது உங்கள் கம்ப்யூட்டர் திரையில் கீழே சிஸ்டம் ரேயில் K போட்ட ஒரு ஐகனைப் பார்க்கலாம்.முன்னேற்பாடுகள்நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மோசில்லா, நோட்பேட், எம்.எஸ். வேர்ட் என்று எந்த புரோகிராமைத் திறந்து வைத்திருந்தாலும் எ-கலப்பையைக் கொண்டு அதில் டைப் செய்யலாம். அதற்கு முதலில் நீங்கள் எ-கலப்பையைத் தயார் செய்ய வேண்டும்.மேற்சொன்ன K ஐகனை ரைட்க்ளிக் செய்யுங்கள். Keyman Configuration... என்பதைத் தேர்ந்தெடுங்கள்.இப்போது வரும் பெட்டியில் UNICODETAMIL என்பது டிக் ஆகியிருக்கும்.பெட்டியில் வலப்பக்கம் கீழே Alt என்பது டிக் ஆகியிருக்கும், அதன் அருகில் 2 என்ற எண் இருக்கும். இதுதான் நீங்கள் தமிழ் விசைப்பலகைக்கு மாறுவதற்கான குறுக்குவழி. Alt விசையை அழுத்திக்கொண்டு 2-ஐத் தட்டினால் தமிழில் டைப் செய்யலாம். மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற அதே குறுக்குவழியைத் தட்டலாம். இப்போது இந்தப் பெட்டியில் OK பட்டனைத் தட்டுங்கள்.தமிழில் டைப் செய்யத் தொடங்குங்கள்

முதலில் Alt + 2 தட்டுங்கள். இப்போது K என்ற ஐகன் 'அ' என்று மாறியிருக்கும்.'அஞ்சல்' விசைப்பலகையில் என்பது ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் வரும். அதனால்தான் தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் கூட எந்தச் சிரமமும் இன்றி எ-கலப்பை, முரசு அஞ்சல் போன்ற சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்துகிறார்கள்.உதாரணமாக, 'தமிழ்ச் செல்வி' என்று தமிழில் வர ஆங்கிலத்தில் thamizs selvi என்று டைப் செய்ய வேண்டும். 'அன்பு' என்பதற்கு anbu; 'இன்றைய பெண்ணின் இணைய இதழ்' என்று அடிக்க 'inRaiya peNNin iNaiya ithaz'.தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதினால் என்ன ஸ்பெல்லிங் வருமோ அதை அடித்தால் தமிழ் வந்துவிடும். 'ந'வுக்கு w, 'ஃ'-க்கு q என்று ஒரு சில விஷயங்களை மற்றும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த விரிவான வரைபடத்தை ஒரு முறை பார்த்தால் போதும்...ஒரு வேளை வைத்துக்கொள்ளுங்கள் அவசரத்திற்கு செயலியை நிறுவமுடியாமல் இருப்பதாக. அப்படியான நேரங்களில் பயன்படுத்தக் கூடியதே சுரதாவின் பக்கம். இங்கு உங்களிற்கு தேவையான தட்டச்சு தளக்கோலத்தை தேர்ந்து எடுத்து தட்டச்சு செய்யலாம். பின்பு அங்கிருந்து பிரதி செய்து உங்களிற்கு தேவையான இடத்தில் ஒட்டிவிடலாம்.
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm


தமிழில் டைப் செய்வது அவ்வளவு ஈஸி! உங்கள் டைப்பிங் வேகம் பழகப் பழக அதிகமாகும். இப்போதே உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யத் தொடங்கிவிடுங்கள்!இனி அனைத்து கோப்புகளிற்கும் தமிழில் பெயரிடலாம். ஏன் இன்னும் தயக்கம் ஆரம்பியுங்கள்.


இந்தக் கட்டுரை நான் எழுதவில்லை இணையத்தில் பெற்றுக்கொண்டது. நான் எழுதப் போவதைவிட அழகாக எழுதியுள்ளதால் வெட்டி யொட்டியுள்ளேன். தகுந்த இடங்களில் மாற்றங்களும் மேலதிக தகவலும் சேர்த்துள்ளேன்.

தமிழ் யுனிக்கோடை உயிர்ப்பிக்க

தற்போது கணணியில் ஆங்கிலத்தில் செய்யும் வேலைகள் அனைத்தையும் கிட்டத்தட்ட தமிழிலும் செய்ய முடியும். இதற்கு முதலில் உங்கள் கணணியில் யுனிகோட் வசதியை உயிர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பல.
1. உங்கள் மொசிலா உலாவியில் தமிழ் ஒழுங்காகக் காட்சி தரும்
2. கோப்புகளிற்கு தமிழில் பெயரிடலாம் (குறிப்பாக தமிழ் பாடல்களிற்கு) .
3. இன்டாநெட் எக்ஸ்புளோரர் டைட்டல் பாரில் தமிழ் தலைப்புகள் தெரியும் (இல்லாவிட்டால் சில பெட்டிகளே தெரியும்)

இதைப்போல பல எண்ணிலடங்கா வசதிகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
முதலில் Start -> Control Panel -> Regional and Language Option என்ற தெரிவை இரட்டைக் கிளிக் செய்யவும்.

வரும் விண்டோவில் Languages எனும் டப்பை கிளிக் செய்யவும் பின்பு Install files for complex script and right-to-left languages எனும் செக் பாக்சை செக் செய்யவும். இப்போது ஓகே பட்டனை கிளிக் செய்யவும் உங்களிடம் வின்டோஸ் எக்ஸ் பி குறு வட்டு கேட்கப்படும் அதையுள்ளிட்டால் தானாக நிறுவல் முடிவடையும். அதன் பின்னர் ஒரு தடவை கணணியை மூடிப் பின்னர் திறவுங்கள் (ரீபூட் செய்யுங்கள்).

இப்போது உங்கள் கணணி யுனிக்கோட்டின் உச்சப் பயன்பாட்டைப் பெறத்தயாராகி விட்டது. உங்கள் கணணியை ஒரு தடவை பரீட்சித்துப் பார்ப்பதற்கு நீங்கள் பின்வரும் வெப்தளங்களுக்கு ஒரு தடவை சென்று பாருங்கள்.
1. http://www.bbctamil.com
2. http://ta.wikipedia.org
3. http://www.bbc.co.uk/hindi (இது இந்தி வெப்தளம்)

இனி அடுத்த பதிவில் எவ்வாறு யுனிகோட் தமிழில் உள்ளிடுவது (Input) எனப் பார்ப்போம். இந்த முறை மூலம் நீங்களும் உங்கள் வலைப் பதிவுகளில் தமிழில் உள்ளிடலாம்.

10 மணிக்கு மேல் தொலைக்காட்சி இல்லை


சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூர் பிரதமர் ஓர் நாட்டின் தலை நகருக்குச் சென்றார். அந்த நகரின் எழிலைப் பார்த்து இரசித்த பிரதமர் தன் நாடும் ஒரு நாள் இப்படி மாறும் என்று கூறினார். அந்த நாடு வேறெந்த நாடுமில்லை நம்ம இலங்கைதான். இன்று சிங்கபூர் எங்கே? இலங்கை எங்கே?. மலையும் மடுவும் போலே.

இலங்கை தற்போது தூரநோக்கற்ற நகைச்சுவையாளர்களால் ஆளப்பட்டு வருகின்றது என்பதற்கு அடுத்த உதாரணம். “இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்பிற்குத் தடை” காரணம் மின்சார சேமிப்பாம்.

மீறி ஒளிபரப்பும் நிறுவனங்களிற்கு தண்டப்பணம் அறவிடப்படுமாம். மின்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன கூறுகையில், “இந்த உத்தேச திட்டமானது அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் 1 மில்லியன் ரூபாய் தண்டத்தொகை விதிக்கப்பட உள்ளது” என்றார். ஏற்கனவே இலத்திரனியல் ஊடகங்கள் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவர்களின் விளம்பரங்களில் பெரும் பகுதி 9 – 11 மணி வரையான நேரத்தில் ஒளிபரப்பாகும் நேரத்தில் இதன் மூலம் தாம் நஷ்டம் அடையவேண்டும் எனக் கூறியுள்ளன.
அரச தொலைக்காட்சி கூட இது சாத்தியமில்லாத முயற்சி என்று கூறியுள்ளது. சிறிலங்காவின் அரச தொலைக்காட்சியான ரூபவாகினியின் தலைவர் நியூட்டன் குணரத்ன கூறுகையில், “இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்புகளை நிறுத்துவது என்பது சாத்தியம் இல்லை” என்றார்.
“சிறிலங்காவில் மக்கள் இரவு 10 மணிக்கு கண்டிப்பாக உறங்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதன் மூலம் சர்வதேச சமூகத்தில் நகைப்புக்குரிய நாடாகிவிடுவோம்" என்று தெல்சான் நிறுவன தலைவர் சான் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
"இந்த நாட்டை நகைச்சுவையாளர்கள் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் முதலில் இரவு கேளிக்கை விடுதிகளை இழுத்து மூடட்டும்” என்றும் அவர் சாடினார். நாட்டின் மக்கள் தொகையில் 48 விழுக்காடு மக்கள் பற்றரி மூலமே தொலைக்காட்சிகளைப் பார்க்கின்றனர். 52 விழுக்காட்டினர்தான் மின்சாரத்தை சார்ந்துள்ளனர் என்றும் சான் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
இதேவேளையில் எதிர்கட்சியான ஐக்கியதேசியக் கட்சியும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது அடிப்படை உரிமைகளை மீறுவதாக சாடியுள்ளது.
இந்த முயற்சி மூலம் அரசு தன் எதர்பார்ப்பை அடையுமா என்றால் அது நடக்கப் போவதில்லை. இம் முயற்சி இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் எதர்மறையான தாக்கங்களையே ஏற்படுத்தப்போகின்றது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் பீதிகொண்டு நாட்டை விட்டு வெளியேறப்போவது மட்டும் உறுதி. ஏற்கனவே இனப் பிரச்சனை காரணமாக அதள பாதாளத்தில் விழ ஆரம்பித்து விட்ட இலங்கைப் பொருளாதாரம் இதன் மூலம் மேலும் ஒரு மரண அடி வாங்கப்போகின்றது.

ஈழப் பிரைச்சனையில் இந்தியா நேரடியாக தலையிடுமா?

இறுதியாக ஐரோப்பிய ஒன்றியமும் த.வி.புலிகளைத் தடை செய்தாகிவிட்டது. புலிகள் இது குறித்து இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. அமேரிக்கா, கனடா, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து வரிசையில் இப்போது ஐரோப்பிய ஒன்றியமும் இனைந்து கொண்டுள்ளது.

2002 ல் அரசும் புலிகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்போது இருந்த நிலையைவிட இப்போது புலிகளுக்கு அரசியல் நெருக்கடி அதிகமாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் புலிகள் பெற்றதைவிட இழந்ததே அதிகம் எனலாம். கருணா அம்மானின் பிரிவு, சர்வதேச நாடுகளின் தடை என பட்டியல் மோசமாக நீள்கின்றது.

தீவிரவாதத்தையும் சுதந்திரப் போராட்டத்தையும் சர்வதேச சமூகம் வேறுபடுத்திப் பார்க்க தவறிவிட்டது என்றேதான் சொல்ல வேண்டும். தமிழர்கள் கூட்டம் கூட்டமாக கொண்றழிக்கப்படும்போது கண்மூடி இருக்கும் சர்வதேசம் தமிழர் தரப்பு விடும் ஒரு சிறு பிழையைம் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. தேவாலயங்கள் மீது இராணுவ விமானங்கள் குண்டு வீசுகின்றன, தாயை அணைத்தபடி சேய்... இருவரும் உயிரற்ற சவங்களாக. இப்படி எத்தனை கொடூரங்கள் அரங்கேறிவிட்டன?. ஏதொ இவையெல்லாம் மீண்டும்மேரர் தடவை அரங்கேறப் போவதாகவே எம்மவர் ஊகிக்கின்றனர்.

இலங்கையில் தீர்வு ஒற்றை ஆட்சியின் கீழ்தான் என்று மகிந்த இராஜபக்ஸ தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் புலிகள் கடைசிவரைக்கும் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வுகாண ஒத்துக்கொள்ளப்போவதில்லை. குறைந்த பட்சம் சுயட்சிமுறை, இல்லாவிட்டால் யுத்தம் தான் பதில். அதுதான் முறையும் கூட. ஏனெனில் சுமார் 18 000 போராளிகளின் கல்லறைகளுக்கு அதுதான் ஆறுதல் அளிக்கும்.

ஈழத்தில் தமிழர்கள் படும் அவலத்திற்கு இப்போது நம் தொப்புள் கொடி உறவுகள் குரல் கொடுக்க முன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. முதல்வர் கருனாநிதி தொடக்கம் ஜெயலலிதாவரை ஈழத் தமிழர்பால் அன்பு கொள்ளத் தொடங்கிவிட்டனர். முக்கிய காரணம் இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்காண தமிழர்களின் உணர்வுகளை தமிழகமோ இந்தியாவோ புறந்தள்ள முடியாது. ஈழத் தமிழர்களின் துயர் துடைக்கும் தார்மீகக் கடமை இந்தியாவிற்கு உண்டு, அதை இந்தியா மறுக்க முடியாது.

தற்போதுள்ள நிலமைகளை ஆராய்ந்து பார்த்தால் இந்தியா இலங்கைப் பிரைச்சனையில் தலையிட வேண்டும் என்று தமிழ் தரப்புகளும் சரி சிங்களத் தரப்பும் சரி விரும்புகின்றன. ஆயினும் இருவரது எதிர்பார்ப்புகளும் வெவ்வேறானவை. ஒவ்வொருவரும் இந்தியா தமக்க ஆதரவாக இயங்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இந்தியா தமிழர்களிற்கு எதிராக செயற்பட்டு தமிழக தமிழர்களின் நம்பிக்கையை இழக்க விரும்பாது. அதே வேளை புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு ஈழம் கொள்கைக்கு ஆதரவாகவும் செயற்படப்போவதில்லை. இன்னுமொரு பரவலான கருத்துண்டு அதுதான் இந்தியா தன் நாட்டிலுள்ள சுயாட்சி முறைமையை விட அதிகாரம் கூடிய சுயாட்சி முறை இலங்கையில் அமைய ஆதரவளிக்காது என்பது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பதை இப்போது கூற முடியாது ஆனால் இதில் உண்மையில்லாமல் இல்லை. இந்திய மாநிலங்களை விட அதிகாரம் கூடிய மாநிலம் ஒன்று இலங்கையில் தோண்றுமாயின் அதைப் பார்த்து இந்திய மாநிலங்களும் கூடுதல் அதிகாரம் கோரலாம் என்பதே அது. ஈழக் கொள்கையை இந்தியா எதிர்ப்பதற்கும் இதுவே முக்கியகாரணம். இதனால் தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பெயரில் ஒர ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதை ஈழத் தமிழர் பால் திணிக்க முனைந்தது ஆயினும் அது செல்லாமல் போனதுதான் உண்மை.

இவற்றிற்கு முன்னால் ஒன்றை நாம் பார்க்கவேண்டும் இலங்கை பேச்சுக்களில் இந்தியா தொடர்ந்தும் பார்வையாளராக இருக்குமா என்பதே. இந்தியா அப்படியான ஒரு தோற்றத்தையே கடந்த சில வருடங்களாக காட்டி வருகின்றது. அப்படி இந்தியா வருமானால் நோர்வேயின் பங்கு என்ன?.

என்கணக்குப்படி இந்தியா நீண்ட நோக்கில் இலங்கை பிரச்சனையில் தலையிடத்தொடங்கிவிட்டது. தற்போது நோர்வே பேச்சு வார்த்தை முயற்சியிலிருந்து ஓரம்கட்டப்பட்டு வருவதைக் காணலாம். அடுத்த கட்டமாக இந்தியா நேரடியாக தலையைப் போட்டாலும் அதிசயப்படுவதற்கில்லை. ஏனெனில் இலங்கையில் மேற்குலக ஆதிக்க சக்திகள் நிலையூண்டுவதை இந்தியா இம்மியளவும் விரும்பாது. அது இந்தியாவின் பிராந்திய அரசியல் ஸ்திரத்தை குலைக்கும் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே இந்தியா இலங்கையில் அமேரிக்க தலையீட்டை போதுமான அளவு தடுத்துள்ளது. திருகோணமலை எண்னைக்குதங்களை இந்தியா பெற்றுக்கொண்டுள்ளது இதனால் இலங்கையின் அல்லது தெற்காசியாவின் பாதுகாப்பான இயற்கைத்துறைமுகம் இந்தியா கையில். பெற்றோலிய வினயோகத்தில் அறுபது விழுக்காடு இந்தியன் ஒயில் கம்பனியே வைத்திருக்கின்றது. இந்தியாவின் ICIC வங்கி இலங்கையிலும் காலூன்ற தொடங்கிவிட்டது. ஆகவே இந்தியா ஏற்கனவே இலங்கையின் பொருளாதாரம் அரசியல் காரணிகளில் தலையிடத் தொடங்கிவிட்டது. விரைவில் நேரடியாக இனப்பிரைச்சனை விவகாரத்திலும் தலையிடுமா???? காலந்தான் பதில் சொல்லும்.

சிறு வயது நினைவுகள்...

Photobucket - Video and Image Hosting
இரண்டாவது வயது ம்ஹும்.... ஞாகபகம் இல்லை
மூண்றாவது வயது சத்தியமா எதுவும் குறிப்பிடும் படியாக ஞாபகம் இல்லை...
நான்காவது வயதில்.... ஆம் சில சில ஞாபகங்கள் வருகின்றது...... ஆனால் சிதறல் சிதறலாக அங்கு மிங்குமாக.......

நர்சரிக்கு அம்மா காலையில் கையைப்பிடித்துக் கூட்டிக்கொண்டு போவது ஞாபகம் இருக்கின்றது..

நர்சரி ரீச்சரின் பெயர் பால.... என்று தொடங்குகின்றது சரியாக ஞாபகம் இல்லை. எல்லாரும் வீடு சென்றபின்னரும் நான் அம்மாவின் வருகைக்காக காத்து இருப்பேன்....... அம்மா அருகிலுள்ள பாடசாலையில் ஆசிரியர் என்பதால் அம்மா வர எப்பிடியும் 1.30 ஆகும். அதுவரைக்கும் நர்சரி ரீச்சரின் பேத்தியுடன் விளையாடியதாக ஞாபகம். பேத்தியின் பெயர் ஜனனி என்று நினைக்கின்றேன். சில வருடங்களிற்குப் முன்னர் இவர்களைப் பற்றி அம்மா ஒரு நாள் சொன்னா நர்சரி ரீச்சரும் அவரின் முழு குடும்பமும் கனடாவில் செட்டிலாகிட்டதாய். இதுக்கு மேல் ஜனனி பற்றி எந்த தகவலும் எனக்கு தெரியாது... அவ முகம் கூடி எனக்கு இப்ப ஞாபகம் இல்லை...

இதுக்குப் பிறகு பாடசாலைக்கு போனது நல்லா ஞாபகம் இருக்கு அப்போது நான் சேர்ந்த பாடசாலை கோனேஸ்வரா வித்தியாலயம். பாடசாலைக்குள் நுழைந்தபேது கஜேந்திரன் எனும் பொடியன் ஜன்னலில தொங்கிக் கொண்டிருந்ததும் நல்ல ஞாபகம் இருக்குது. இப்ப இவன் யாழ்ப்பாணப் பல்பலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி கற்கின்றான். இவங்கள விட சங்கர்கணேஷ், தேவ்காந், ஜெகன்.... இவங்களெல்லாம் இப்ப எங்கையோ தெரியாது.

பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரைக்கும் படிக்கலாம் அதுக்குப் பின்னர் சுவருக்கு மறுபக்கமுள்ள இந்துக் கல்லூரிக்குப் போக வேண்டும். ஆனால் நான் ஐந்தாம் ஆண்டு படிக்கும் போது இரண்டு பாடசாலைகளையும் ஒரு பாடசாலையாக்கி மத்திய அரசு பொறுப்பேற்றுக் கொண்டது.
http://www.tcohindu.org

முதலாம் வகுப்பில் பாலேஸ் ரீச்சர். இப்ப கண்டாலும் சைக்கிளால இறங்கி குட்மோர்ணிங் சொல்லுவன். இப்ப ஓய்வு பெற்று விட்டா. ஆங்கிலம் தவிர்ந்த அனைத்துப் பாடங்களையும் இவரே படிப்பிப்பார். நாம் படிக்கும் போது நான்காம் ஆண்டு வரை எமது இலங்கை பாடவிதானத்தில் ஆங்கிலம் இருக்கவில்லை. நான்காம் ஆண்டுக்கு போக பயப்பிட்ட காரணங்களில் ஒன்று ஆங்கிலம் தொடங்குகின்றது, இரண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, மூண்று என் பிரியமான பாலேஸ் ரீச்சர் போய் புது ரீச்சர், பெயர் ஜெயகலா வருகின்றார். எதர் பார்த்ததைவிட எம்முடன் அன்பாகவே இருந்தார்.
எட்டு வயதில் என்றுதான் நினைக்கின்றேன் அப்பா எனக்கு கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சுவிஸ்லாந்து சென்ற ஞாபகம் இருக்கின்றது. அவரை வழி அனுப்ப கொழும்பு வந்த போது புறக்கோட்டை அரசமரத்தடியில் துலைந்து போய் அழுது கொண்டு நின்றதும் பின்பு கடலை விற்கும் ஒரு சிங்களவன் என்னை போக்குவரத்து கண்காணிப்பு பொலீசிடம் கூட்டிக்கொண்டு போய் விட்டதும் நன்றாகவே ஞாபகம் இருக்கின்றது. இப்போது கூட அவ்விடத்தால் செல்லும்போது ஒரு தடவை மனதுக்குள் சிரித்துக் கொள்வேன். அந்த கடலை வியாபாரி மட்டும் ஞாபகம் இல்லை........

நான்காம் வகுப்பில்தான் என் வாழ்கையில் பயங்கரமான விபத்து நடந்தது. அது வரை சுகந்திரப் பறவையாக பறந்து திரிந்த என்னை ரியூசன் எனும் கூட்டுக்குள் அடைத்து விட்டப்பட்ட நாள். அதுவும் நகரிலேயே கடுமைக்குப் பெயர் போன தனம் அக்கா எனும் ரீச்சரிடம். இவரிடம் நான் வேண்டாத பேச்சு என்ன வேண்டாத அடி என்ன. பல தடவை அம்மா நான் செய்த குற்றங்களிற்காக ரியூசன் வகுப்பு ரீச்சரை சந்தித்து இருக்கின்றா. உதாரணமா ஒரு நாள் நாங்களெல்லாம் ரியூசனுக்கு முன்னால் உள்ள மைதானத்தில் கிரிகட் விளையாடினோம் எங்கள் அனைவரையும் 10 ம் வகுப்பு மாணவர்களை ஏவி விட்டு கைது செய்து முட்டிபோட்டு வெய்யிலில் நிக்க வைத்தா அந்த ஆத்தா. ஆனால் ஒன்று மட்டும் உண்மை இவரால் தான் நான் புலமைப்பரிசில் பரீட்சை முதல் கல்வி பொது தராதர சாதாரணப் பரீட்சை வரை சித்தி எய்தினேன்.

இந்தக் காலமெல்லாம திரும்பி வராது இப்போது இயந்திரத்தனமான வாழ்கை. காலையில் எழுந்து அவசரம் அவசரமாக வெளிக்கிட்டு பின் பஸ் தரிப்படத்திற்கு ஓடி அங்கிருந்து 138 ம் இலக்க பஸ் எடுத்து கம்பஸ்சுக்குபோய்...... இப்படியே அலுப்பான வாழ்க்கை..... செய்ததையே திருப்பி திருப்பி செய்யும் வாழ்க்கை.

பேசுவதற்கோ அரவணைப்பதற்கோ அம்மாவும் அருகில் இல்லை. போதுமடா சாமி இந்த பாழ்பட்ட கொழும்பு வாழ்க்கை......