மூதூரில் அப்பாவி முஸ்லிம்கள் கொலை

நன்றி புதினம்.காம்
மூதூர் அரபுக்கல்லூரியில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் மீது சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் அங்கிருந்த பத்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.


இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை நண்பகல் நடந்தது.

மூதூர் பகுதியில் நேற்று முன்தினம் சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பித்ததை அடுத்து அங்கிருந்து இடம்பெயர்ந்த சுமார் ஒன்பதாயிரம் முஸ்லிம் மக்கள் மூதூர் அரபுக்கல்லூரி மற்றும் பள்ளிவாசல்களில் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இவ்வாறு செறிந்திருந்த மக்கள் மீது வீழ்ந்து வெடித்த சிறிலங்காப் படையினரின் எறிகணைகளால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மக்களின் சரியான விவரம் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.

இதேவேளை, மூதூர் இறங்குதுறை பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் கடும் சமர் நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை அதிர்கின்றது

சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மூதூர் நகர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கின்றது.


திருகோணமலை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல் தொடர்ச்சியாக இச்சமர் நடைபெற்று வருகிறது.

திருகோணமலை துறைமுகப் பிரதேசத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூதூர் இறங்குதுறையைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் அதனைத் தொடர்ந்து முன்னேறினர்.



தமிழீழ விடுதலைப் புலிகளின் சம்பூர் முன்னரங்க காவல் நிலைகளிலிருந்து 800 மீற்றர் தொலைவில் உள்ள சிங்கள இராணுவத்தின கட்டைப்பறிச்சான் மற்றும் பலாத்தோப்பு, பச்சானூர் ஆகிய முகாம்கள் தகர்க்கப்பட்டு சிங்கள இராணுவத்தினர் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து காந்திநகர், பலாத்தோப்பு, தோப்பூர், செல்வநகர் ஆகிய சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த மூதூர் பகுதிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்டனர்.

தற்போது மகிந்தபுரம் பகுதியில் மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான சம்பூரில் சிங்கள விமானப் படையின் கிபீர் ஜெட் விமானங்கள் குண்டு வீசி வருகின்றன.

மேலும் மாவிலாறு அணைக்கட்டை ஆக்கிரமிப்பதற்காக கல்லாறு பகுதியில் நடத்தி வந்த மோதலை சிங்கள இராணுவம் கைவிட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

திருமலை சமரினால் திருகோணமலை துறைமுகத்தில் உள்ள சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிடங்குகள் மற்றும் இந்திய பெற்றோலிய நிறுவனத்திடம் தற்போதும் கைவசம் உள்ள எண்ணெய்க் குதங்கள் ஆகியவற்றுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று சிறிலங்கா பெற்றோலியத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

Thanks : Puthinam.com